5 ஆண்களில் ஒருவருக்கும், 6 பெண்களில் ஒருவருக்கும் வாழ்க்கையில் எப்போதாவது புற்று நோய் வரும்

ஐந்து ஆண்களில் ஒருவருக்கும், ஆறு பெண்களில் ஒருவருக்கும் வாழ் நாளில் எப்போதாவது புற்று நோய் உண்டாகும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புற்று நோய் காரணமாக இந்த ஆண்டில் மட்டும் சுமார் 96 லட்சம் பேர் உலகம் முழுவதிலும் உயிர் இழப்பார்கள் என ஐக்கிய நாடுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் ஒரு கோடியே 81 லட்சம் பேருக்கு புதிதாக புற்று நோய் ஏற்படும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
புற்று நோய் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்தபடி உள்ளது. மற்ற நோய்களை போல் புற்று நோய்க்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இதன் காரணமாக புற்று நோய் பரவலாக எல்லா நாடுகளிலும் அதிகமாகி வருகிறது. இது சம்பந்தமாக ஐ.நா. அமைப்பின் சர்வதேச புற்று நோய் ஆய்வு மையம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண்டுக்கு 1 கோடியே 41 லட்சம் பேர் புதிதாக புற்று நோய்க்கு ஆளானார்கள். ஆண்டுக்கு 82 லட்சம் பேர் உயிர் இழந்தனர்.
ஆனால், இப்போது அதைவிட அதிகமாக நோய் பாதிப்பும், உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன.
இது சம்பந்தமாக அந்த மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் வில்டு கூறும் போது, உலகம் முழுவதும் புற்று நோய் அதிகரித்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

LIKE US ON FACEBOOK

இதை தடுப்பது உலகத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது என்று கூறினார்.

முறையான தடுப்பு நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுப்பதாலும், நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவதாலும் உயிர் இழப்புகளை தடுக்க முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் தொகை வளர்ச்சி, வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, சுகாதாரமற்ற வாழ்க்கை, வாழ்க்கை முறையில் ஆபத்தான மாற்றங்களை உருவாக்கியது போன்ற காரணங்களால் தான் புற்று நோயின் தாக்கம் அதிகரிப்பதாகவும் கூறி உள்ளனர்.

21-ம் நூற்றாண்டில் புற்று நோய் காரணமாகத்தான் உலகத்தில் அதிக உயிர் இழப்புகள் ஏற்படும் என்று கணித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

12-க்கும் மேற்பட்ட புற்று நோய் வகைகள் உள்ளன. அதில் ஒவ்வொரு நாட்டில் நிலவும் சமூக சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஒரு குறிப்பிட்ட வகை புற்று நோய்கள் அந்த நாட்டு மக்களை தாக்குகின்றன.

You might also like
error: .